Monday 30 May 2011

ஒரு காதல் கதை


அடர்ந்த காடு. நரிகளின் பயமுறுத்தும் சத்தம். பேய் இருட்டு. வழி எங்கு இருக்கிறது என்று சுத்தமாக தெரியவில்லை. இப்படி ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டான் கதாநாயகன் ரமேஷ். அவன் எப்படி அங்கு சென்றான் என்று கூட அவனுக்கு தெரியவில்லை.சிகரெட் பிடிக்கும் பழக்கம் அந்த நேரத்தில் அவனுக்கு பேருதவியாக இருந்தது. அவனிடம் இருந்த lighter ஐ ஆன் செய்தான். வெளிச்சம் தெரிந்தது. வீட்டிற்கு செல்ல வேண்டிய பாதையும் தெரிந்தது. அது மிகவும் குறுகலான பாதையாக இருந்தது. பாதையின் இருபுறமும் அகல பாதாளம் போல் இருந்தது. அந்த குறுகலான பாதையில் நடக்கும் போது கரணம் தப்பினால் மரணம் என்பது அவனுக்கு நன்றாக தெரிந்தது. இருந்தாலும் பாதையை வெற்றிகரமாக கடந்துவிடலாம் என்று அவன் மனது அவனிடம் கூறியது. துணிச்சலாய் நடந்தான். பயம் இல்லாமல் பாதி தூரம் நடந்தான்.

திடிரென்று பயம் வந்தது. உடல் நடுங்கியது. வியர்த்து கொட்டியது. கீழே பார்த்தான். பள்ளம் மிக ஆழமாக இருந்தது. தரையே தெரியவில்லை. அவன் நம்பிக்கையை இழந்தான்.இறக்கப் போகிறோம் என்று நம்பி அழுதான். நினைத்தது தான் நடக்கும் என்பது போல அகல பாதாளத்தில் விழுந்தான். தரையை தொடும் போது உயிர் பிரிந்து விடும். எழுந்திருக்கவே முடியாது!!!!

”எழுந்துடு டா, எவ்வளவு தடவை கூப்பிடுவது” என்று தாய் ரமேஷை எழுப்பும் போது தான் இது கனவு என்று தெரிந்தது. “ஏன் தான் இப்படி கனவு வருதோ, உண்மையாக நடப்பது போலவே இருக்குது. இதுல என்ன special na அந்த கனவு விடிந்தாலும் மறக்காமல் நினைவில் இருக்கிறது.” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

வியாழக்கிழமை இரவு படுக்கைக்கு செல்கிறான் ரமேஷ். கனவு வர கூடாது என்று எண்ணிக் கொண்டே படுக்கைக்கு செல்கிறான். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் ஆபிஸ் செல்கிறான். வெள்ளிக்கிழமை என்பதால் சுறுசுறுப்பாக வேலை செய்கிறான். ஏனென்றால் அடுத்த இரண்டு நாள் விடுமுறை. எப்போதும் பார்த்திராத ஒரு புது பெண்ணை அலுவலகத்தில் பார்க்கிறான். இவ்வளவு அழகான பெண்ணை இது வரை அவன் ஆபிஸில் பார்த்ததே இல்லை. அவள் மேல் ஒரு வித ஈர்ப்பு உண்டானது. தன் விழியின் தூரத்தில் இருந்து விலகும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுபடியும் அவளை எப்போது பார்ப்போம் என்று காத்துக் கொண்டிருந்தான். அவளையே எண்ணிக் கொண்டிருந்தான். திடிரென்று அவள் வருவதை பார்த்தான். இவனை நோக்கி வருவதை பார்த்தான். இவன் எதிர்பார்த்திராத வகையில் இவன் எதிரிலேயே வந்து நின்றாள். பேச ஆரம்பித்தாள். இவன் எதுவுமே புரியாமல் கண் இமைக்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். மனதை இழுத்து அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்கத் தொடங்கினான். “ஹாய் ரமேஷ். என் பெயர் ரேனுகா. நான் புதிதாக இங்கு சேர்ந்து உள்ளேன். மானேஜரை பார்த்தேன். உங்களை சென்று பார்க்குமாறு கூறினார்.”

“ஒ, நீங்கள் தான் அந்த புது நபரா. மானேஜர் நேற்றே சொன்னார். மீட்டிங் ரூமிற்கு செல்லுங்கள். நான் வருகிறேன்.”

“நம்ம அவளை பார்த்து வழிவது அவளுக்கு தெரிந்து விட்டால் மானம் போய் விடும். டேய் ரமேஷ், முகத்தை சீரியஸா வைச்சிகோ. அவளுக்கு பிராஜக்டைப் பற்றி விவரிக்கனும். அவளுடைய கண்களைப் பார்த்தால் எனக்கு பேச்சே வரலையே. ஆண்டவா, என்னை காப்பாற்று. என் மானம் போய்டாம பார்த்துக்கோ”

மீட்டீங் அறைக்குச் சென்றான். அவள் உட்கார்ந்து இருந்தாள். ”அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கே! சரி, சரி, ரொம்ப வழியாத, அவளுக்கு பிராஜக்டை ஒழுங்காக விவரி” என்று தன்னிடம் சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாக அவளுக்கு விவரித்து விட்டான். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவன் இடத்திற்கு மனமே இல்லாமல் நடந்தான். அந்த நாள் முழுவதும் அவளின் நினைவு அவன் மனதை ஆக்கிரமித்தது. கற்பனையில் மிதந்தான். கற்பனைக்கு எல்லை இல்லாதது ரமேஷ் போன்ற ஆட்களுக்கு எவ்வளவு நன்மையாக இருக்கிறது பாருங்களேன்!!

வெள்ளிக்கிழமை அவன் சரியாக உறங்கவே இல்லை. ஏனென்றால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவளை பார்க்க முடியாது. திங்கள்கிழமை வரை எப்படி காத்திருப்பது என்று மிகவும் வருந்திக் கொண்டு இருந்தான். அவளை ஒரு நாள் மட்டும் தான் பார்த்திருக்கிறான். அதற்குள் அவனுக்கு என்ன ஆனது. அவன் ஏன் அவளை பார்க்கத் துடிக்கிறான். இதற்கு பெயர் காதலா அல்லது வெறும் ஈர்ப்பா? இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் தண்ணீரில் இருந்து வெளிவந்த மீன் போல் ஏன் துடித்தான். அதன் பெயர் தான் என்ன? நிச்சயம் தெரிந்து கொள்ளலாம். மேலே படியுங்கள்.

திங்கள்கிழமை வந்தது. ஒரே பிராஜக்ட் என்பதால் அவளிடம் அதிகம் பேச வாய்ப்பு கிடைத்தது. நிறையவே பேசினார்கள். நல்ல நண்பர்களாக ஆனார்கள். ரமேஷ் மனதில் எப்போதும் ஒரே குரல், “உன்னை விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்பிகிறேன் என்று கூறிவிடு.”

ஆனால் அதை சொல்ல தகுந்த நேரத்தை தேடிக் கொண்டிருந்தான். ஆவுடிங் செல்ல இவனுடைய பிராஜக்ட் மானேஜர் முடிவு செய்திருந்தார். சினிமாவிற்கு சென்றுவிட்டு, பிறகு இரவு உயர்தர உணவகத்தில் உணவருந்தி விட்டு வரலாம் என்று முடிவு செய்தார். பிராஜக்டில் இருக்கும் அனைவருக்கும் மெயில் அனுப்பி இருந்தார்.

மெயிலை பார்த்து தலை கால் புரியாமல் சந்தோசத்தில் தத்தளித்தான் ரமேஷ். எப்படியாவது திரையரங்கில் அவள் அருகில் உட்கார வேண்டும். காதலை சொல்லி ஆக வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அந்த நாளிற்காக காத்திருந்தான், ஆர்வமுடன் காத்திருந்தான், பயத்துடன் காத்திருந்தான், ஆசையுடன் காத்திருந்தான்.

அந்த நாள் வந்தது. காதலை சொல்லும் நாள் வந்தது. அனைவரும் திரையரங்கை அடைந்தார்கள். எப்படியா பல பேரிடம் பேசி, கெஞ்சி அவளின் அருகில் வெற்றிக்கரமாய் இடத்தைப் பிடித்துவிட்டான். படம் ஆரமித்தது. “சொல்லு டா, சொல்லுடா” என்று மனது கூறியது. இருந்தாலும் அதே மனம், பயத்தில் நடுங்கியது. அவள் என்ன சொல்லுவாளோ என்ற பயம் தான்.

இடைவேளை வந்தது. அவளிடம் சகஜமாய் பேச முயற்சி செய்து பேசி கொண்டிருந்தான். ஆனால் அவன் சகஜமாக பேச வில்லை, ஏதோ ஒரு பயத்தில், பதற்றத்தில் பேசுகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இடைவேளை முடிந்தது. படமும் தொடர்ந்தது. ஆனால் அவன் பயம் குறையவே இல்லை. “நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாது. பேசாமல் sms அனுப்பிவிடலாம்” என்று முடிவு செய்து விட்டு அனுப்பிவிட்டான். அவள் தன்னுடைய் போனை எடுத்தாள். அவனுக்கு அந்த குளுகுளு திரையரங்கிலே தீடிரென்று நன்றாக வேர்த்தது.

அவள் smsஐ படித்து முடித்து விட்டாள். உடனே எழுந்தாள். மானேஜரிடம் ஏதோ சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டாள். “ஆயோ, அவன் கிட்டே போட்டு கொடுத்து விட்டு போறாளே. அவன் சும்மாவே ஆடுவான். இப்ப சொல்லவா வேணும். ஆண்டவா காப்பாற்று. Harassment policy அது இது என்று இவன் இராமாயணம் பேச ஆரமிச்சிடுவான். நம்ம ஒன்னும் தப்பா எதுவும் அனுப்பலையே. நான் எதுக்கு பயப்பட வேண்டும்” என்று தன்னைத் தானே சமாதான படுத்திக் கொண்டான்.

“எது எப்படியோ, இத்தனை நாளாய் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை சொல்லிவிட்டோம். இனி நிம்மதியாய் இருக்கலாம்” என்று நிம்மதியாய் படம் பார்க்கத் தொடங்கினான்.

மறுநாள் அவள் ஆபிசிற்கு வந்தாள். அவனிடம் எதுவும் பேசவில்லை. சில சமயம் அவள் பேசினால், ஆபிஸ் வேலை சம்பந்தமான விஷயங்களை மற்றுமே பேசினாள்.

சில நாட்கள் அப்படியே ஓடியது. ரமேஷ் முடிவு செய்தான். அவளிடம் பேசியாக வேண்டும் என்று முடிவு செய்து, “ரேனுகா, ஏன் பேச மாட்ற? நான் என் விருப்பத்தை சொன்னேன். நீ உன் பதில சொல்லனும்ல. இப்படி பேசாம இருந்தா, நான் என்னனு நினைப்பேன்.” என்று கேட்டான்

“நி என் கிட்டே சொலிருக்க. சரி. ஆனால் அதை நீ எத்தனை நாளாய் சொல்ல நினைத்து இருப்பாய். ஆனால் நான் மட்டும் உடனே பதில் சொல்லனுமா. நான் யோசிக்க வேணாமா, முடிவு எடுக்க வேணாமா” என்று நறுக்கென்று கூறினாள்

அவன் திருதிரு வென்று முழித்துக் கொண்டிருந்தான். “எல்லாத்தையும் பண்ணிட்டு, ஏன் இப்படி திரு திருனு முழிக்கிற?” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாள்.

“சிரிக்கிறா ! சிரிக்கிறா! ஒகே என்று நாசுக்கா சொல்லிட்டு போறாளா. ஒன்னுமே புரியலையே. சரி நாளை வரைக்கும் காத்திருப்போம்” என்று முடிவு எடுத்தான்.

மறுநாள் வந்தது. அவள் வரும் திசையும் தெரிந்தது. .நேராக ஒடினான் அவளிடம், “ரேணுகா, பதில் சொல்லு. இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்கணும்”

”நான் தான் பதில் கூறிவிட்டேனே”
”எப்போ நீ பதில் சொன்ன”
“நேத்து தான் சொன்னனே”
”எங்கே சொன்ன. என்னை கிண்டலடித்து விட்டு, சிரிச்சிக்கிட்டே போய்ட்ட”
“மறமண்ட, உனக்கு மூளை சுத்தமா கிடையாதா? ஒரு பொண்ணு சிரிப்புக்கு அர்த்தம் கூட தெரியல. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன கஷ்டப்பட போரேனோ? ” என்று சிறிதாக சிரித்தாள். அவளின் சிரிப்பை பார்த்து விட்டு அவன் சந்தோசத்தில் தத்தளித்தான். இது மட்டும் படமாய் இருந்தால், இந்த நேரத்தில் நிச்சியமாக ஒரு பாடல் வந்திருக்கும்.

அவர்களின் காதல் வாழ்க்கை அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்தது. இருவரும் திருமணம் பற்றி தங்களின் வீட்டில் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டார்கள்.திருமணம் நல்ல படியாக முடிந்தது. கணவனும், மனைவியும் ஒரே அலுவலகம். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். நம்ம ரமேஷ் கொடுத்து வைச்சவன் தான்.

அவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. திடிரென்று ஓரு வெள்ளிக்கிழமை அவன் மனைவிக்கு காய்ச்சல் அடித்தது. அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்று, மருந்து வாங்கிக் கொண்டு விட்டிற்கு வந்தான்.

“அம்மா, என்னால் இன்னிக்கு லீவு போட முடியாது. ஒரு முக்கியமான வேலை இருக்கு. ரேணுகாவை நீ பார்த்துக் கொள். நாளைக்கு எனக்கு லீவு தான், நாளைக்கு நான் பாத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு ஆபிஸிற்கு சென்று விட்டான்.

மதியம் வீட்டிற்கு போன் செய்தான், “அம்மா ரேணுகா, எப்படி மா இருக்கா, சாப்பிட்டாளா?” என்று தாயிடம் கேட்டான். “என்னடா சொல்ற, யாருடா ரேணுகா. போன வாரம் ஒரு பொண்ணு பாத்தோம். ஆனா அவ பேரு கூட ரேணுகா இல்லையே. டேய் வழக்கம் போல் ஏதாவது கனவா? போனை வைத்து விட்டு வேலையை கவனிடா. மாலை வீடு வரும் போது, உங்க அப்பாவை அத்தை வீட்டில் இருந்து அழைத்து வா. மறந்திட போற. நியாபகம் வச்சிக்கோ. இது கனவில்லை டா. சரியா. நான் வைச்சிடறன்”

அப்போது அவனுக்கு புரிந்தது. ரேணுகாவை பார்த்த அந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்தது எல்லாம் கனவு என்று. “ஒரு மணி நேரம் லேசா தூங்கினதில் இவ்வளவு பெரிய கனவா!!ஆயோ, ரேணுகா, நீ கனவா, நிஜம் இல்லையா. உன்னை மாதிரி ஒரு பொண்ண நான் எங்கே கண்டுபிடிப்பேன். ஆண்டவா, இந்த கனவு பிரச்சினைக்கு ஒரு முடிவே இல்லையா?”

No comments:

Post a Comment